Blog

  • Amputhanai Eythuvidu / அம்புதனை எய்துவிடு

    அம்புதனை எய்துவிடு…

    மலர்கள் மணம்வீச மகிழ்ச்சிப் பெருக்கெடுக்க
    வசந்தருது வருகையிலே வருகின்றான் மாரனுமே.
    வெண்ணிலவு குடைபிடிக்கத் தென்றலெனும் தேரேறி
    கரும்புவில் கையேந்தி மலர்க்கணைகள் எய்திடவே

    இசைந்ததொரு வசந்தத்தில் வருகின்றான் மதனுமே
    இயற்கையெழில் எல்லாமெங்கும் இங்கிதமாய் இருக்கையிலே
    முனிவரையும் மனம்மயக்கும் இளவேனிற் தோற்றத்திலே
    கன்னியர் நினைவினிலும் கல்யாணக் கனவுகள் உருவாக்கும்,

    எண்ணங்கள் துளிர்த்திட இனியஉலா வரும் காமனே
    சற்றே நில்! நான் உரைத்திடும் உண்மை கேள்.
    சீதைதனை மணமுடிக்கச் சீராகச் ஸ்ரீஇராமன்
    அயோத்தியிலே வில்லொடித்தான் அழகாக அன்று.

    மங்கையர் மனதினில் காதல் கணைதனை எய்துவிட்டு
    வரதட்சணை வில்தனை வளைத்தொடிக்க முடியாது
    காதல்செய்த நாயகர்கள் கையாலாகாதவர்களாய் இன்று.
    ஆறறிவுடைய உயர்திணையான நம்மானிட இனத்தினிலே

    ஆணினம் தாம் மணமுடிக்க நேசங்கொண்ட பெண்வீட்டில்
    அணிகலன்,வீடு, ரொக்கமென அதிகமாய்க் கேட்பதனால்
    தரமுடியா நிலையாலே தம் கல்யாணக் கனவுகள்
    தரைமட்டமாகிடுமோ எனக்கன்னியரும் கலங்கிநின்றார்.

    பூக்களெல்லாம் தேன் சொரியும் வசந்தகாலப் பொழுதினிலே
    இளம்பூவையர் கண்களில் நீர்ப்பூக்கள் இனிவேண்டாம்.
    நற்றவம் புரிந்த நம்மிறை சிவனாரின் தவம்கலைக்க
    மலரம்பு எய்தி நின்ற மாரனே மனங்களை வருத்தி

    மாறாதத் துயரூட்டும் வரதட்சணைக் கொடுமைதனை உன்
    கூரம்புகள் எய்தே குவலயத்தில் அழித்துவிடு.
    காதல் தவமியற்றும் கன்னியரின் மனங்களிக்க
    மலரம்புகள் எய்யும்முன்னே மறுமலர்ச்சி அம்புகளை எய்துவிடு
    புரட்சி அம்புகளை எய்துவிடு…!

  • Malarkal Malarvathellam / மலர்கள் மலர்வதெல்லாம்

    மலர்கள்  மலர்வதெல்லாம்…

    மண்ணிலே விதையிட்டு கண்போலக் காத்திருந்து,
    எண்ணியது நிறைவேற இதழ்விரிக்கும் மலர்கள்,
    வண்ணங்கள் கண்டு மனங்களது மலர்ந்தாலும்,
    மண்மீது வாடிவதங்கி  சருகாகும் நிலையெண்ணியே,

    புண்ணாகும் இதயமது ஏக்கத்தால் வலியெடுக்கும்.
    புண்ணியம் செய்தாலும் பூக்களது நிலைக்காதென்றாலும்,
    கொண்ட நறுமணமோ கூடவே நினைவில்வரும்.
    அண்டிவரும் அந்திவேளை அஸ்தமனங்கள் எல்லாம்

    மீண்டும் நல்லதொரு விடியலுக்கு வேளைதரும்.
    மண்ணில் வேரடியில் வீழ்ந்துமலர்கள் சருகானாலும்,
    திண்ணமாய் மீண்டும் மலர்மலர எருவாகும்.
    கண்டு மனம்மகிழ உறுதுணையாய் உரமூட்டும்
    மலர்கள் மலர்வதெல்லாம் மீண்டும் மலர்வதற்கே…

  • Saathanai / சாதனை

    சாதனை

    காலுக்குள் இடறிய சிறுகல்லதனைத் தானெடுத்துக்
    கண்ணருகே நீபிடித்துக் கண்ணையது மறைக்குதென
    கண்ணீரைத்தான் சொரிந்தே கவல்வதால் என்னபயன்?
    கையதனைத் தான்நீட்டி கல்லதனைத் தூரவைத்தே

    காணும் வேளையிலே, கல்லதனைச் சிறியதாய்க்
    கண்களது கலக்கமின்றிக் காட்சி கொள்ளும்
    கனத்த மனம் காற்றெனவே இலேசாகும்.
    வாழ்வினில் வந்தெதிர்க்கும் இடர் களைய

    சவால்களைச் சாமர்த்தியமாய் சாதனையாக்கித்
    தரிசிக்கும் திறன் கொண்டு செயற்பட்டால்
    சரிந்துவிழும் நிலைமாறிச் சலித்தமனம் துணிவுபெறும்.
    சந்திக்கும் துயரகற்றி தளராத உறுதிபெறும்.

  • Illatha Makalir Thinam / இல்லாத மகளிர் தினம்

    இல்லாத மகளிர் தினம்

    மாட்சிமிகு மனித இனத்தின் வேராயிருக்கும் பெண்மை,
    பேச்சிலடங்கா பெருமை மிக்கது.
    மூச்சுக்கும் இனிமை சேர்க்கும் இயல்பு ஆனாலுமென்ன
    மகளிர் மாறாத கண்ணீரோடும் ஆறாத காயங்களோடும்

    வாழ்வில் போராடும் நிலை இன்றும்.
    ஏடும், எழுத்தும், நாடும் நாளும் போற்றும் பெண்,
    நடைமுறையில் நடைப்பிணமாய் நசுக்கப்படுவதுமேன்…?
    கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென

    பொங்கி முழங்கிட புறப்பட்டதால்த்தான் ஆறாத காயங்கள்
    மகளிருக்காய் ஆனதுவோ..?
    கருவிலே பெண்ணெனத் தெரிந்தால் கலைக்கப்படும் நிலைதொடர,
    கல்யாணம் வேண்டுமென்றால் பெண்ணை விலைபேசும் நிலைவேறு.

    வரதட்சணைத் தொகையங்கு வந்து சேரவில்லை என்றால்
    தீக்குளிக்கும் சீதைகள்தான் தினம் எத்தனை எத்தனை..?
    ஹஒருவனுக்கு ஒருத்தி´ எனும் முறை மாற்றி ஒரு’தீ ´உடலெரிக்கும்
    பாவமுறு மாறாக் கொடுமைகளாய் மகளிருக்குத் தொடர்கிறதே…

    மாறாத கண்ணீரும் ஆறாத காயங்களும் மகளிருக்கு வேண்டாம்.
    சிறகொடிந்த பறவைகளாகப் பெண்கள் மரபுப் பாதையில்
    மனங்குறுகி துயர் சுமந்து நடந்தது போதும்…
    துணிவான பெண்கள் தொல்காப்பியத்தில் மட்டுமல்ல…

    துல்லியமாய்க் கண் எதிரிலும் தோன்ற வேண்டும்.
    பெண்ணினம் தலைகுனிந்து நின்றதால்
    எம் எத்தனையோ தலைமுறைகள் தலைமறைவாகின
    நிகழ்காலப் பெண்களினம் தயக்கமின்றி

    தலை நிமிர்ந்து வாழத் துணிந்து விட்டால்
    வருங்காலப் பெண்களுக்கு தேசீயகீதமாய்த் திகழலாம்
    அதுவரை உண்மை இல்லா மகளிர் தினத்திற்காய்
    ‘சர்வ மகளிர் தினம்´ என நாள் ஒன்றினை ஒதுக்கிப்

    போடும் கோஷங்களும் போகும் ஊர்வலங்களும்
    ஒருநாள் வேஷங்களே…ஒருநாள் வேஷங்களே…

  • Thirai Maraivil // திரை மறைவில்…

    திரை மறைவில்…

    ஆணவமெனும் திரை மறைவில்,
    ஞானத்தை மறைத்திட நினைப்பதனால்,
    அகந்தை ஓங்கியே தலையுயர்த்தும்
    ஆட்டமுறும் வேளை தாள்பணியும்

    ஆணவமெனும் திரை மறைவில்
    அறிவின் வளர்ச்சி குறையேற்கும்
    நானெனும் அகந்தை போதையேறும்
    நாளாகக் கூனிக் குறுகிநிற்கும்

    ஆணவம் வெற்றி பெறுவதெல்லாம்
    அடுக்கடுக்காய் தோல்விகளைச் சுமக்க,
    அடக்கம் தரும் மெய்நிலை மறந்து
    ஆணவத் திரைக்குள் அரங்கேறும்

    வேகங் கொண்ட மமதையினால்
    வீணாய் மாயவலை வீழ்ந்தே
    வாழும் வாழ்க்கை கலக்கமுறும்.
    பாழும் தலைக்கனம் தடுமாறும்

    விவேகம் கொண்டு வழிகாண
    விழித்திடும் மனதில் ஒளிபிறக்கும்
    அகந்தை அழிpந்திட அடக்கம்வரும்
    அன்போடு பணிவும் சேர்ந்துவரும்

  • Valliyammai Yar Intha Valliyammaiyar…?

    வள்ளியம்மையார் இந்த வள்ளியம்மை யார்…?

    புள்ளிமயில் வாகனன்மனம் அள்ளிப்பறித்த மயில்.
    வேலேந்தும் வேலவனை விழிவீச்சால் வென்றகுயில்.
    வள்ளியம்மையார் இந்த வள்ளியம்மையார் என்றே
    அள்ளிவந்து பதிலுரைத்தால் அதுஇங்கே பொருந்தாது

    விண்ணுலகத் தெய்வமல்ல மண்ணுலக மனிதப்பிறவி.
    தென்னாபிரிக்கா உதித்த பெண்ணுலகப் புதுப்பிறவி
    ஒத்துழையாமை இயக்கம் ஓங்கியே வெற்றிபெற
    சித்தமாய் தானுழைத்தே தேடினார் தனிப்பெருமை.

    காந்திஜிக்கும் கருத்துணர்த்தி கண்டபயன் அதுஅருமை
    இந்திய மக்களுக்கு  இழைக்கப்பட்ட அநீதி கண்டு
    இறைமைதனைப் பெற்றெடுக்க பொங்கியே சினந்தெழுந்தார்.
    உரிமைக்காய் குரல்கொடுத்துப் போராடிச் சிறையும்சென்றார்.

    பதினாறாம் பிறந்தநாளில் பரிதாபம் உயிர்துறந்தார்.
    பிறந்த தினமும் மறைந்ததினமும் மாசி இருபத்திஇரண்டு
    தன் தமிழினம் விடிவுபெற தளராதுழைத்த விடிவெள்ளி
    பெண்ணினத்தை விழிக்க வைத்த பெரும் வலுவாய்

    கண்ணியமிக்க கடமையின் கலக்கமற்ற எடுத்துக்காட்டு.
    தன்இனம் வாழ தனையீன்ற தனிவீரத்தின் வெற்றிக்கொடி
    தலைக்குனிவைப் போக்கிடவே தார்மீக புதுவழிதேடி
    பதினாறு அகவையிலே பரம்பரையின் தலைவிதி மாற்ற

    மதிகொண்டு போராடி மாதர்குலச் சுதந்திர ஒளிச்சுடராகி
    பெண்ணினத்தின் பெரும்பேறென காந்திஜியின் மதிப்பும் பெற்று
    பள்ளியெழுச்சிப் பாடி பெண்ணியத்தைத் தட்டியெழுப்பி
    முதல் வீராங்கனையாய் முனைப்புடன் புறப்பட்டுப் போராடி

    துள்ளிவந்த உணர்வாலே தன்னுயிரைத் தியாகம் செய்த
    வள்ளியம்மையார் இவரே அந்த வள்ளியம்மையார்.

  • Kurukkathu Siruththavale / குறுக்கது சிறுத்தவளே..!

    குறுக்கது சிறுத்தவளே..! 

    குறுக்கது சிறுத்தவளே கூனற்பிறை நுதலே
    முறுக்குமிகு காளையெந்தன் மனம் உந்தன் எழிலாலே
    சறுக்குதடி நிலைமறந்து சௌந்தரியமே நீ விழியசைத்தால்
    கிறுக்குஅது ஏறுதடி கிள்ளை உந்தன் நினைவாலே
    மறுக்குதடி பால்பழங்கள் பசி தாகம் தெரியவில்லை
    வெறுக்குதடி பஞ்சணையும் உறக்கமது நெருங்கவில்லை
    கறுக்குதடி எந்தன்மனம் உன் கனிமுகத்தைக் காணாவிடில்
    பொறுக்குதில்லை தனிமையடி பொழுதிங்கு நீண்டதடி
    இறுக்கமடி என்காதல் இதை நீயும் புரிந்திடடி
    அறுக்காது என் அன்பை ஆருயிரே நீ ஏற்று
    நிறுத்தாது உயிர்மூச்சை என்னிதயம் நீடித்திட
    நல்லதொரு பதிலதனை நயமாகத் தந்திடடி
    நம் காதல் மணம் வீச மனஅரும்பை அவிழ்த்திடடி.

  • Kaasu / காசு

    காசு

    காசு ஒன்றே கடவுளாமோ…?
    பேசாப் பிணங்கூட காசென்றால்
    வாய் திறக்குமென உரைப்பதனால்
    காசே கடவுளா கருத்தினைக் கூறிடுவாய்.

    பாசமிகு பெற்றோரை காசினால் யாரும்
    நேசம் நிறை நெஞ்சமுடன் மேதினியில்
    வாங்கி மகிழ வழியுமுண்டோ சொல்.
    வாசமிகு பூஞ்சோலையாய்

    வாழவேண்டிய குடும்பந்தனில்
    நீசமுறு வஞ்சனையால் நிதம்

    நிம்மதியைத் தொலைத்த மனம்
    காசு கொண்டு அமைதியினைக்

    கண்டிட முடியுமோ சொல்.
    கூசிடாது கூற்றுவன்போல்
    கொல்ல வந்த கொடுநோயை
    மாற்றிட இனி முடியாதென

    வைத்தியர் கை விரித்தவேளை
    காசு கொண்டு காலனைத்தான்
    கலைத்திட முடியுமோ சொல்.
    கருணையருள் இறைவனின்

    கடைக்கண் பார்வை வேண்டி
    காசு கொண்டு யாகஞ் செய்தால்
    காரியம் நிறைவேறுமோ சொல்.
    சொந்த தேசம் ஏதுமில்லை

    சுளை சுளையாய்க் கையில் பணம்
    பூரித்துப் பெருமை கொள்ள
    பொருந்திடுமா நீயே சொல்.
    பாதாளம் மட்டும் பாயும்காசு

    பயன்மிகு ஆதாரமானாலும்
    தேவையற்றுப் போகும்வேளை
    செல்லாக் காசாய் மாறிடுமே
    புரிந்து கொள்வாய்.

  • Uvamai / உவமை

     உவமை
    கண்மணியே உன் கண் மீன் என்றேன்.
    மீன் கண்மூடித் துயில்வதில்லை என்றாள்.
    கன்னம் பட்டு என்றேன்.
    பட்டு பல பூச்சிகள் மாய்ந்து உருவாவது என்றாள்.

    இமைகள் பட்டாம்பூச்சி என்றேன்.
    ஆரம்பம் அருவருப்பு என்றாள்.
    நீ மலர் என்றேன்.
    மலர், வண்டுகள் பலதேன் உண்ணும் இடம் என்றாள்.
    இதழ் பவளம் என்றேன்.
    பவளம் படியற்பாறை என்றாள்.  
    வைரமே என்றேன்.
    கரித்துண்டு என்றாள்.
    வதனம் சந்திரன் என்றேன்.
    களங்கம் அதிலும் உண்டு என்றாள்.
    விழி சுடர் என்றேன்.
    சுடர் சுடும் என்றாள்
    மான் என்றேன்
    ஐந்தறிவு விலங்கு என்றாள்.
    மொழி தேன் என்றேன்.
    ஒரு சொட்டைச் சுவைப்பதற்கும்
    பல சிற்றுயிர்கள் அழியுதென்றாள்.
    ஏன் என்றேன்.
    நான், நான் என்றாள்.
    பெண்களுக்கு உவமை தேடி
    பேதலித்து நிற்க வேண்டாம்.
    உள்ளத்து அவலங்களை
    உணர்ந்திடப் பழகிடுங்கள்.
    உவகை அது தருமென்றாள்.
  • Unnaip Polave Ulakinai Neasi…

    உன்னைப் போலவே உலகினை நேசி…

    உன்னைப் போலவே உலகினை நேசி.
    ஒருகணம் மனிதா நீயே யோசி.
    எண்ணியே பணத்தை நோட்டுக்களாக,
    எடுத்தடுக்கி வைக்கும் ஈயாத மனிதா…!எத்தனை உயிர்கள் ஊன் உடையின்றி,
    உடல்,உயிர் சுமையென ஊசலாடிட,
    நிலைமை அறிந்தும் நீ இரங்காது,
    வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தானேது?

    மதங்கள் பலவெனப் பேதமைப் பேசும்,
    மடமைமிகு மனிதா மதமென்பதென்ன…?

    இறைவனை ஏத்தியும் இல்லையென்றும்,
    ஆத்திகர்,நாத்திகர் வாதங்கள் ஒருபுறம்.
    இதுவொன்றே எம் இறைவனின் நாமமென்றே,
    எதிர்ப்புகள் காட்டிடும் அறிவிலர் மறுபுறம்.

    எனக்கோர் இறைவனென எடை போடாது,
    எமக்கோர் இறைவன் என்றே யோசி.
    ஆண்,பெண் எனறே இருவகை சாதி.
    அதனிலும் மேலாய் ஆயிரம் சாதிகள்.

    சாதி பேதமெனப் பற்பலக் குறைகள்,
    நாம் புறக்கணிக்காது நேசிக்கும் சிறைகள்.
    ஆன்ம விடுதலை தேடிக் காத்திருந்தாலும்,
    அரசியல் சுதந்திரம் வேண்டி நின்றாலும்,
    உன்னைப் போலவே உலகினை நேசி.

    ஒருகணம் மனிதா நீயே யோசி.
    உன்னை மட்டும் நீ நேசித்தால்,
    நீவிலங்காய் மாறிட அது கைவிலங்கு.
    ஓளிவிளக்காய் நீயும் விளக்கம் கொண்டு,
    மானிட நேயத்தால் மனிதனாய் வாழந்திடு.

    மானிடத்துள்ளே உன்னைத் தேடிடு.