Uvamai / உவமை

 உவமை
கண்மணியே உன் கண் மீன் என்றேன்.
மீன் கண்மூடித் துயில்வதில்லை என்றாள்.
கன்னம் பட்டு என்றேன்.
பட்டு பல பூச்சிகள் மாய்ந்து உருவாவது என்றாள்.

இமைகள் பட்டாம்பூச்சி என்றேன்.
ஆரம்பம் அருவருப்பு என்றாள்.
நீ மலர் என்றேன்.
மலர், வண்டுகள் பலதேன் உண்ணும் இடம் என்றாள்.
இதழ் பவளம் என்றேன்.
பவளம் படியற்பாறை என்றாள்.  
வைரமே என்றேன்.
கரித்துண்டு என்றாள்.
வதனம் சந்திரன் என்றேன்.
களங்கம் அதிலும் உண்டு என்றாள்.
விழி சுடர் என்றேன்.
சுடர் சுடும் என்றாள்
மான் என்றேன்
ஐந்தறிவு விலங்கு என்றாள்.
மொழி தேன் என்றேன்.
ஒரு சொட்டைச் சுவைப்பதற்கும்
பல சிற்றுயிர்கள் அழியுதென்றாள்.
ஏன் என்றேன்.
நான், நான் என்றாள்.
பெண்களுக்கு உவமை தேடி
பேதலித்து நிற்க வேண்டாம்.
உள்ளத்து அவலங்களை
உணர்ந்திடப் பழகிடுங்கள்.
உவகை அது தருமென்றாள்.

Leave a Reply

(*) Required, Your email will not be published