சாதனை
காலுக்குள் இடறிய சிறுகல்லதனைத் தானெடுத்துக்
கண்ணருகே நீபிடித்துக் கண்ணையது மறைக்குதென
கண்ணீரைத்தான் சொரிந்தே கவல்வதால் என்னபயன்?
கையதனைத் தான்நீட்டி கல்லதனைத் தூரவைத்தே
காணும் வேளையிலே, கல்லதனைச் சிறியதாய்க்
கண்களது கலக்கமின்றிக் காட்சி கொள்ளும்
கனத்த மனம் காற்றெனவே இலேசாகும்.
வாழ்வினில் வந்தெதிர்க்கும் இடர் களைய
சவால்களைச் சாமர்த்தியமாய் சாதனையாக்கித்
தரிசிக்கும் திறன் கொண்டு செயற்பட்டால்
சரிந்துவிழும் நிலைமாறிச் சலித்தமனம் துணிவுபெறும்.
சந்திக்கும் துயரகற்றி தளராத உறுதிபெறும்.
