Vetrikkup Pinnal…

வெற்றிக்கு பின்னால்…!

கற்றிடப் பலதையும் கனிவாய் உரைத்து,
பற்றுடன் பலம்பெற பாசமாய் வளர்த்து,

ஊற்றாய் அறிவின் உயர்வுகள் காட்டி,
வற்றாநதியாய் எம் வாழ்வது சிறக்க,
ஏற்றே கடமைகள் இசைவாய் ஆற்றி,
ஆற்றலை எனக்குள் நாற்றாய் நட்ட
அன்புத் தந்தை,என் வெற்றிக்குப் பின்னால்,
முன்னெடுத்து நடந்த முயற்சியின் திறவுகோல்.

முழுமூச்சாய் உழைத்த முன்னறி தெய்வம்.
ஒற்றுமை பேணக் கற்றுத் தந்தவர்.
குற்றங்கள் கண்டால் கோபமாய்க் கடிந்தவர்.
சுற்றமுணர்த்திச் சிறகுக்குள் வளர்த்தவர்.

சிற்பியாய்க் குடும்பத்தைச் சிறப்பாய்ச் செதுக்கியவர்.
பற்றுக் கோடாய் அன்னையுடன் பந்தமாய் வாழ்ந்தவர்.
உற்றார் மற்றாரை உளமார நேசித்தவர்.
ஊரின் பெருமைதனை ஓயாமல் உரைத்தவர்.
கற்பூரமாய் அவர்மூச்சு காற்றிலே கலந்தாலும்,
போற்றிடும் பேற்றினைப் புவிமீதில் பெற்றவர்
விழிகளைத் தானமாக்கி விண்ணுலகு சென்றாலும்;
வழிகாட்டிய தெய்வமாய் என்வெற்றிக்குப் பின்னால்
வாழந்த என் தந்தையை வாழ்விருக்கும் வரை
போற்றியே துதிப்பேன் அவர் போதனைகளை மறவேன்…

Leave a Reply

(*) Required, Your email will not be published