அந்த நொடியில்…!

அந்த நொடியில்…!

அந்தமில்லாதது,அதீதமானது,அதுவே தாய்மையின் சிறப்பு.
இந்த உலகிலே என்னை நானறிந்த நாள் முதல்,
சொந்தமாய்; தூயதாய்த் தொடர்வதும் தாய்மையின் அன்பு.

 மந்திரம் தந்தையின் வாய் மொழியெனும் மதிப்பினை,
சிந்தையில் சிறப்பாய் பதித்ததும் தாய்மையின் பொறுப்பு.

அந்தராத்மாவரை அனைத்தையும் அணைத்தே மக்களைச்,
சொந்தமாய்த் தன்வசமாக்கிடும் தாய்மையின் துடிப்பு.

வந்தனம் சொல்லி தினந்தினம் போற்றுதல் காட்டி,
பந்த பாசந்தனை வளர்ப்பதும் தாய்மைக்கு வனப்பு.

சுந்தரத் தாய்மையின் சுடர்விடும் மதிப்பினை
அந்தரமின்றி அனுபவித்தப் போதிலும் நான்
அந்நிய தேசம் வந்தே எந்தன் உயிரிலும்
தரணியில் மதிப்புறு தாய்மையை உணர்ந்திட்ட
அந்த நொடியில்….அடைந்திட்ட பூரிப்பு.
சொந்த உணர்வினை சொல்வது எப்படி…?

எந்தனுக்கு மகவாய் எங்கள் மகள் உதிக்க
வந்தே வருத்திய வலிதனை மறந்தே
சிந்தை மகிழ்ந்தேன் சிறப்பாய்த் தாயான
அந்த நொடியில்…..தாயான அந்த நொடியில்…..

Leave a Reply

(*) Required, Your email will not be published