Unnaip Polave Ulakinai Neasi…

உன்னைப் போலவே உலகினை நேசி…

உன்னைப் போலவே உலகினை நேசி.
ஒருகணம் மனிதா நீயே யோசி.
எண்ணியே பணத்தை நோட்டுக்களாக,
எடுத்தடுக்கி வைக்கும் ஈயாத மனிதா…!எத்தனை உயிர்கள் ஊன் உடையின்றி,
உடல்,உயிர் சுமையென ஊசலாடிட,
நிலைமை அறிந்தும் நீ இரங்காது,
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தானேது?

மதங்கள் பலவெனப் பேதமைப் பேசும்,
மடமைமிகு மனிதா மதமென்பதென்ன…?

இறைவனை ஏத்தியும் இல்லையென்றும்,
ஆத்திகர்,நாத்திகர் வாதங்கள் ஒருபுறம்.
இதுவொன்றே எம் இறைவனின் நாமமென்றே,
எதிர்ப்புகள் காட்டிடும் அறிவிலர் மறுபுறம்.

எனக்கோர் இறைவனென எடை போடாது,
எமக்கோர் இறைவன் என்றே யோசி.
ஆண்,பெண் எனறே இருவகை சாதி.
அதனிலும் மேலாய் ஆயிரம் சாதிகள்.

சாதி பேதமெனப் பற்பலக் குறைகள்,
நாம் புறக்கணிக்காது நேசிக்கும் சிறைகள்.
ஆன்ம விடுதலை தேடிக் காத்திருந்தாலும்,
அரசியல் சுதந்திரம் வேண்டி நின்றாலும்,
உன்னைப் போலவே உலகினை நேசி.

ஒருகணம் மனிதா நீயே யோசி.
உன்னை மட்டும் நீ நேசித்தால்,
நீவிலங்காய் மாறிட அது கைவிலங்கு.
ஓளிவிளக்காய் நீயும் விளக்கம் கொண்டு,
மானிட நேயத்தால் மனிதனாய் வாழந்திடு.

மானிடத்துள்ளே உன்னைத் தேடிடு.

Leave a Reply

(*) Required, Your email will not be published