புள்ளிமயில் வாகனன்மனம் அள்ளிப்பறித்த மயில்.
வேலேந்தும் வேலவனை விழிவீச்சால் வென்றகுயில்.
வள்ளியம்மையார் இந்த வள்ளியம்மையார் என்றே
அள்ளிவந்து பதிலுரைத்தால் அதுஇங்கே பொருந்தாது
விண்ணுலகத் தெய்வமல்ல மண்ணுலக மனிதப்பிறவி.
தென்னாபிரிக்கா உதித்த பெண்ணுலகப் புதுப்பிறவி
ஒத்துழையாமை இயக்கம் ஓங்கியே வெற்றிபெற
சித்தமாய் தானுழைத்தே தேடினார் தனிப்பெருமை.
காந்திஜிக்கும் கருத்துணர்த்தி கண்டபயன் அதுஅருமை
இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு
இறைமைதனைப் பெற்றெடுக்க பொங்கியே சினந்தெழுந்தார்.
உரிமைக்காய் குரல்கொடுத்துப் போராடிச் சிறையும்சென்றார்.
பதினாறாம் பிறந்தநாளில் பரிதாபம் உயிர்துறந்தார்.
பிறந்த தினமும் மறைந்ததினமும் மாசி இருபத்திஇரண்டு
தன் தமிழினம் விடிவுபெற தளராதுழைத்த விடிவெள்ளி
பெண்ணினத்தை விழிக்க வைத்த பெரும் வலுவாய்
கண்ணியமிக்க கடமையின் கலக்கமற்ற எடுத்துக்காட்டு.
தன்இனம் வாழ தனையீன்ற தனிவீரத்தின் வெற்றிக்கொடி
தலைக்குனிவைப் போக்கிடவே தார்மீக புதுவழிதேடி
பதினாறு அகவையிலே பரம்பரையின் தலைவிதி மாற்ற
மதிகொண்டு போராடி மாதர்குலச் சுதந்திர ஒளிச்சுடராகி
பெண்ணினத்தின் பெரும்பேறென காந்திஜியின் மதிப்பும் பெற்று
பள்ளியெழுச்சிப் பாடி பெண்ணியத்தைத் தட்டியெழுப்பி
முதல் வீராங்கனையாய் முனைப்புடன் புறப்பட்டுப் போராடி
துள்ளிவந்த உணர்வாலே தன்னுயிரைத் தியாகம் செய்த
வள்ளியம்மையார் இவரே அந்த வள்ளியம்மையார்.
