Amputhanai Eythuvidu / அம்புதனை எய்துவிடு

அம்புதனை எய்துவிடு…

மலர்கள் மணம்வீச மகிழ்ச்சிப் பெருக்கெடுக்க
வசந்தருது வருகையிலே வருகின்றான் மாரனுமே.
வெண்ணிலவு குடைபிடிக்கத் தென்றலெனும் தேரேறி
கரும்புவில் கையேந்தி மலர்க்கணைகள் எய்திடவே

இசைந்ததொரு வசந்தத்தில் வருகின்றான் மதனுமே
இயற்கையெழில் எல்லாமெங்கும் இங்கிதமாய் இருக்கையிலே
முனிவரையும் மனம்மயக்கும் இளவேனிற் தோற்றத்திலே
கன்னியர் நினைவினிலும் கல்யாணக் கனவுகள் உருவாக்கும்,

எண்ணங்கள் துளிர்த்திட இனியஉலா வரும் காமனே
சற்றே நில்! நான் உரைத்திடும் உண்மை கேள்.
சீதைதனை மணமுடிக்கச் சீராகச் ஸ்ரீஇராமன்
அயோத்தியிலே வில்லொடித்தான் அழகாக அன்று.

மங்கையர் மனதினில் காதல் கணைதனை எய்துவிட்டு
வரதட்சணை வில்தனை வளைத்தொடிக்க முடியாது
காதல்செய்த நாயகர்கள் கையாலாகாதவர்களாய் இன்று.
ஆறறிவுடைய உயர்திணையான நம்மானிட இனத்தினிலே

ஆணினம் தாம் மணமுடிக்க நேசங்கொண்ட பெண்வீட்டில்
அணிகலன்,வீடு, ரொக்கமென அதிகமாய்க் கேட்பதனால்
தரமுடியா நிலையாலே தம் கல்யாணக் கனவுகள்
தரைமட்டமாகிடுமோ எனக்கன்னியரும் கலங்கிநின்றார்.

பூக்களெல்லாம் தேன் சொரியும் வசந்தகாலப் பொழுதினிலே
இளம்பூவையர் கண்களில் நீர்ப்பூக்கள் இனிவேண்டாம்.
நற்றவம் புரிந்த நம்மிறை சிவனாரின் தவம்கலைக்க
மலரம்பு எய்தி நின்ற மாரனே மனங்களை வருத்தி

மாறாதத் துயரூட்டும் வரதட்சணைக் கொடுமைதனை உன்
கூரம்புகள் எய்தே குவலயத்தில் அழித்துவிடு.
காதல் தவமியற்றும் கன்னியரின் மனங்களிக்க
மலரம்புகள் எய்யும்முன்னே மறுமலர்ச்சி அம்புகளை எய்துவிடு
புரட்சி அம்புகளை எய்துவிடு…!

Leave a Reply

(*) Required, Your email will not be published