Blog

  • Ikkaraikku Akkarai

    இக்கரைக்கு அக்கரை

    இக்கரைக்கு அக்கரை…..?
    எண்ணமதில் துணிவுடையார்க்கு
    இதிலில்லை அக்கறை.
    இருக்கும் கரையொன்றே
    எப்போதும் என்கரை
    என்பதொன்றே எண்ணமானால்
    இனியெதற்கு மறுகரை?
    தாவுகின்ற மந்தியாய்
    மனந்தனைப் பாயவிட்டு
    அதுவா இதுவாவென
    தடுமாற்றமது கொண்டு
    மறுகரையை எடைபோடும்
    மடமையினை மறந்து
    உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலென
    வாழ்வோர்க்கு வாழுமிடமும்
    வளமீந்து நலஞ்சேர்க்கும
    இலையுதிர் காலத்தில்
    வெறுமையான மரங்களெல்லாம்
    இருக்குமிடத்தில் நிலைகொண்ட
    உரம்மாறா உறுதியினால்
    இன்னொரு வசந்தமங்கு
    இடந்தேடி வருகின்றன…
    காலமது மாறும்போது
    கலைந்துசென்ற பறவையினம்
    வசந்தமது மலரும்வேளை
    வாழ்வுக்காய் மீண்டும் வருகின்றன.
    மனமுண்டானால் இடமுண்டென்பதனை
    மறுப்பின்றி மனதிலேற
    இக்கரைக்கும் அக்கரைக்கும்
    ஏதுமில்லை பேதமென
    இக்கரையில் அக்கறையொடு
    அமைதியாய் வாழ்ந்திடுங்கள்.
  • Mottukkal Malarkinrana

    மொட்டுக்கள் மலர்கின்றன

    வித்துக்கள் நித்திய பராமரிப்பால்
    முளைவிட்டு இலைவிட்டுப் பயிராகி
    களையோடு காலம் கனியும் வேளை
    மொட்டவிழ்த்து முனைப்போடு மலர்கின்றன

    காலங்கள் சிறப்பாகக் கனியும்வரை
    காத்திருப்பு ஒவ்வொருவர் மனதிலுந்தான்
    கொக்காகக் கொழுத்தமீன் வரும்வரையில்
    பொறுத்திருக்கும் வாழ்வில் தப்பேதுமில்லை

    அரும்புகள் விரியும்வரை பொறுத்திருத்தல்
    அமைதியாய்ப் பயன்பெறப் பார்த்திருத்தல்
    தருணத்தைக் கணித்திருக்கும் நற்கணங்களே
    தாழ்வில்லை அதிலென்றும் வரும்வெற்றிகளே
    பொறுமையான அணுகலிங்கு பெருமையாக
    மொட்டுக்கள் மலர்கின்றன அருமையாக.
                 
                          

  • அந்த நொடியில்…!

    அந்த நொடியில்…!

    அந்தமில்லாதது,அதீதமானது,அதுவே தாய்மையின் சிறப்பு.
    இந்த உலகிலே என்னை நானறிந்த நாள் முதல்,
    சொந்தமாய்; தூயதாய்த் தொடர்வதும் தாய்மையின் அன்பு.

     மந்திரம் தந்தையின் வாய் மொழியெனும் மதிப்பினை,
    சிந்தையில் சிறப்பாய் பதித்ததும் தாய்மையின் பொறுப்பு.

    அந்தராத்மாவரை அனைத்தையும் அணைத்தே மக்களைச்,
    சொந்தமாய்த் தன்வசமாக்கிடும் தாய்மையின் துடிப்பு.

    வந்தனம் சொல்லி தினந்தினம் போற்றுதல் காட்டி,
    பந்த பாசந்தனை வளர்ப்பதும் தாய்மைக்கு வனப்பு.

    சுந்தரத் தாய்மையின் சுடர்விடும் மதிப்பினை
    அந்தரமின்றி அனுபவித்தப் போதிலும் நான்
    அந்நிய தேசம் வந்தே எந்தன் உயிரிலும்
    தரணியில் மதிப்புறு தாய்மையை உணர்ந்திட்ட
    அந்த நொடியில்….அடைந்திட்ட பூரிப்பு.
    சொந்த உணர்வினை சொல்வது எப்படி…?

    எந்தனுக்கு மகவாய் எங்கள் மகள் உதிக்க
    வந்தே வருத்திய வலிதனை மறந்தே
    சிந்தை மகிழ்ந்தேன் சிறப்பாய்த் தாயான
    அந்த நொடியில்…..தாயான அந்த நொடியில்…..

  • Vaanamum Vasappatum…

    வானமும் வசப்படும்…

    நினைப்பதெல்லாம் நடக்காது என்றே எண்ணாமல்,
    நடந்தேறும் என்றே திடமாக நம்பிவிட்டால்,
    நினைப்பவை நிறைவேறும், நெஞ்சமதில் உரமேறும்.
    கடினமும் இலேசாகிக் காரியங்கள் நடந்தேறும்.
    வரிக்குதிரை வனப்பதுவோ மனங்களை மயக்கினாலும்,
    பொழுதெல்லாம் வாளாவிருக்கும் புரிவதில்லை ஏதும்அது,
    கழுதையது கச்சிதமாய்க் கத்தும்குரல் இல்லையானாலும்,
    பழுதின்றிப் பொதிகளைப் பொறுமையுடன் சுமந்துவரும்,
    குதிரையதன் வேகம் பலசாதனைகள் படைத்துநிற்கும்,
    மனிதமனங்களில் வரிக்குதிரை கழுதை,குதிரையெனப் பலவுண்டு.

    தணியாத தாகங்கொண்டால் தரணியில் உயர்வுண்டு:
    என்னால் முடியாக் காரியமிது  எனக்கணக்கிடாது,
    எண்ணித் துணிந்தே காரியமதைக் கையிலெடு.

    கானிடை அலைந்து வாழ்ந்தநம் மனிதன்பின்,
    கடலையும் வானையும் வசப்படச் செய்தான்.

    உன்தோள்களைத் துணிவோடு நம்பிக்கையால் வசப்படுத்து.
    அதுதாங்கிடும் பூமியையும் தாளாத முனைப்போடு.
    நீங்கிடும் தோல்விகள் நிலைத்திடும் மகிழ்வங்கு.
    உன்வல்லமை கண்டு வானமும் வசப்படும்.

    வானம் உன் வசப்படும்…

  • Vetrikkup Pinnal…

    வெற்றிக்கு பின்னால்…!

    கற்றிடப் பலதையும் கனிவாய் உரைத்து,
    பற்றுடன் பலம்பெற பாசமாய் வளர்த்து,

    ஊற்றாய் அறிவின் உயர்வுகள் காட்டி,
    வற்றாநதியாய் எம் வாழ்வது சிறக்க,
    ஏற்றே கடமைகள் இசைவாய் ஆற்றி,
    ஆற்றலை எனக்குள் நாற்றாய் நட்ட
    அன்புத் தந்தை,என் வெற்றிக்குப் பின்னால்,
    முன்னெடுத்து நடந்த முயற்சியின் திறவுகோல்.

    முழுமூச்சாய் உழைத்த முன்னறி தெய்வம்.
    ஒற்றுமை பேணக் கற்றுத் தந்தவர்.
    குற்றங்கள் கண்டால் கோபமாய்க் கடிந்தவர்.
    சுற்றமுணர்த்திச் சிறகுக்குள் வளர்த்தவர்.

    சிற்பியாய்க் குடும்பத்தைச் சிறப்பாய்ச் செதுக்கியவர்.
    பற்றுக் கோடாய் அன்னையுடன் பந்தமாய் வாழ்ந்தவர்.
    உற்றார் மற்றாரை உளமார நேசித்தவர்.
    ஊரின் பெருமைதனை ஓயாமல் உரைத்தவர்.
    கற்பூரமாய் அவர்மூச்சு காற்றிலே கலந்தாலும்,
    போற்றிடும் பேற்றினைப் புவிமீதில் பெற்றவர்
    விழிகளைத் தானமாக்கி விண்ணுலகு சென்றாலும்;
    வழிகாட்டிய தெய்வமாய் என்வெற்றிக்குப் பின்னால்
    வாழந்த என் தந்தையை வாழ்விருக்கும் வரை
    போற்றியே துதிப்பேன் அவர் போதனைகளை மறவேன்…

  • Welcome

    இனிதாய் மலர்ந்தது 2011
    ஏணியாய் எண்ணங்களில் ஏற்றமுற
    எழுத்தோடு கலந்தே பவனி வர
    கேணியிலே தேங்கிடும் நீர் போலன்றி
    வானோடு மண்ணளந்தே மணம்பரப்ப
    பாணியூறும் மலர்கனிகள் தீஞ்சுவைத் திரட்டி
    வண்ணமிகு நவமணிகளாய்க் கோர்த்தெடுத்து
    மணிச்சரமாய் வடிவமைத்துப் படைத்தேனிங்கு
    அணிந்தழகு பார்ப்பதற்குத் தடைகளில்லை
    அதில் குறைநிறைகள் காண்பதற்கும் மறுப்பேதுமில்லை…

  • Mathippeedu

    மதிப்பீடு
    மண்ணில் பிறந்த மானிடர் பலருக்கு
    மனதினுள் இருக்கும் இரண்டு பக்கங்கள்
    புரிந்ததை வாழ்தல் புத்தியின் திறமை
    புறந்தள்ளி வைத்தல் வாழ்வில் மடமை
    உடைநடை கண்டு எடை போடாமல்
    உளமதை அறிந்தால் உண்மை தெரியும்
    அடுத்தவர் தமது பண்பின் முகமதை
    அன்பின் துணைவழி அறிந்திட முயன்று
    ;அங்கொரு பங்கம் விளங்குதல் புரிந்தால்
    தீங்கினை விலக்கிட தெளிவாய்ப் பழகிடு
    யானையைப் பார்த்த குருடரைப் போலே
    விதவிதக் கருத்துக்கள் வீணே வேண்டாம்
    மனமதை அளந்தே ஒருவரை மதிப்பிடு
    மகிழ்வொடு வாழ்ந்திட அதுநல் மதிப்பீடு…

  • Maname Keal

    மனமே கேள்…!
    தவறு எனக் கண்டு நீயும் தானாக முடிவு கட்டி தாவிக் குதிக்கும் மனமே…!
    நீயும் சாந்தமதைக் கொண்டுவிடு.

    சரி என்று எண்ணி நீயும்
    சஞ்சலத்தைத் துடைத்தெறி
    எண்ணமதைப் புனிதமாக்கு
    எதிரில் வரும் நல்அமைதி
    நடப்பதெல்லாம் நன்மைக்கே
    நலிந்திடாது உன்னைத்தேற்று
    இடர் களையும் துணிவு கொண்டு
    இதயமதில் உறுதியேற்று
    இருளில் கூடப் பாதை தெரியும்
    இகலகற்றும் ஒளியையேற்று
    மனமே நீயோ எந்தன் சொந்தம்
    மாற்றியமைத்தல் எனக்கே உரிமை
    நினைத்தே நானும் நிலைக்குள் வைத்தே
    நிம்மதி பெறுவேன் இறைவனை நம்பி…
  • Ilatchiyam

    இலட்சியம்…
    உணவை மறந்து உறக்கத்தைத் துறந்து
    ஓடியாடி ஓயாது உழைத்து
    எண்ணிய எண்ணம் ஈடேறும்வரை
    எல்லா இடர்களையும் ஏற்றே பொறுத்து
    உடலது தேய உணர்வது நிலைக்க
    எதிர்பார்த்த இலட்சியம் இனிதாய்ச் சேர
    வருவது மட்டுமா வாழ்வினில் இன்பம்…?
    எட்டிய இலட்சியமதை இருந்தே அனுபவித்து
    அதன் பயன் உணர்ந்து அருமையைப் பகிர்ந்து
    வாழ்வினில் காண்பதே வளமான இன்பம்
    இலட்சியம் என்பது எட்டும் வரையல்ல
    எட்டிப்பிடித்த பின்பும் இருந்தே வரையறை காண்பது
    அதுவே மகிமை அளவில்லாப் பெருமை
    அயரா முயற்சியால் அடைந்திடும் திறமை…

  • Thaikkoru Kaanikkai

    தாய்க்கொரு காணிக்கை…
    அம்மா…!
    அவனிதனில் அத்தனை உயிர்களையும் நெகிழவைக்கும் ஒரு புனிதச் சொல்.
    சொல் அல்ல.
    ஒருசொல்லால் எழுதப்பட்ட உயிர்ப்பான காவியம்.
    காவியம் அதில் கலந்திருக்கும் பல மிதமான கற்பனை.
    கற்பனைக்கே இடமின்றி; நிசமான நிகழ்வுகளால் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அபரிதமான அன்பின் வெளிப்பாடே தாய்மை.
    தாய் அவள் எம் உயிரென்னும் உலகுக்கு வளம் அளித்து வலம் வரும் சூரியன.
    சூரியனோ கீழ்த்திசைப் பார்த்துத் தோன்றி; மாலைப்பொழுது மேற்கில் அஸ்தமனம.
    அஸ்தமனமாகாத ஆத்மார்த்தமான கருணை ஒளியாலே இருளோட்டி எத்திசையும் தன்பிள்ளை வாழ்வுக்காய்த் தனை ஈனும் உள்ளந்தான் அன்னைக்கு.
    அன்னைமனம் தன்பிள்ளை பசி துயரம் பொறுக்காது.அதை மாற்ற ஓடிவந்து அமுதளிக்கும் அட்சயபாத்திரம்.
    பாத்திரம் மட்டும் அறிந்து பிச்சையிடுபவள் அல்ல தாய.
    தாய்தன் அன்புக்குப் பாத்திரமான அத்தனை உயிர்களுக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்யப் புரிந்திடுவாள் பலசேவை.
    சேவை பல புரிந்து சீராட்டி ஆளாக்கிவிட்ட அன்பின் வடிவம்;. எம் ஆராதனைக்குரிய பேசும் தெய்வம். 
    அவளே எம்தாய்.
     
    தாயவளுக்கே உரித்தான உன்னதங்கள் கொண்டதுதான் கருணை.
    கருணையுடன் கருவிலே உயிர் சுமந்து சுவாசிக்கும் மூச்சிலும் பங்களித்து பிரசவத்தின் போது மரணத்தின் வாசற்கதவை எட்டிவிட்டு வந்து மறுபிறவி எடுக்கும் மகத்தான புதுப்பிறவி.
     
    பிறவி தந்த பெற்றவளுக்குப் பிரதிபலனளிக்க இப்பிறவிதனில் முடியாது.
    முடியாது என்றாலும் முழுமனதாய் நாம் தரலாம் காணிக்கை காணிக்கையாய் 
     
    என் அன்பின் உணர்வுகளைத் மணிச்சரமாக்கி தாயே…!
    தந்து நின்றேன் கவிதையிதாய்…